Tuesday, October 20, 2015

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வுஅக்.,26ல் துவக்கம்


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர்.
அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.
இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:
அக்.,26ல் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை- 2க்கு மாவட்டத்திற்குள் மாறுதல்; அக்.,27ல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இணையதளம் மூலம் அக்.,30ல் நடக்கிறது. மனமொத்த மாறுதல் கோரும் தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு அக்.,௩௦ல் மாறுதல் வழங்க வேண்டும்.இதற்காக விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பம் அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Saturday, October 17, 2015

6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்


விரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 3 பேர் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.
ஊதிய உயர்வுக்காக பதவி உயர்வை துறந்த ஆசிரியர்கள்: ஒரு பள்ளியில் 10 ஆண்டுகள் வரை பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அளிக்கப்படுகிறது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பதவி உயர்வுக்கு முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பலருக்கும், 6 மாதங்களில் தேர்வு நிலை அளிக்கப்பட உள்ளது.
தேர்வு நிலை கிடைக்கும்போது, ஊதியத்தில் 6 சதவீதம் உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில், பதவி உயர்வு கிடைத்தால் 3 சதவீதம் மட்டுமே ஊதியம் உயரும். இதனால், பெரும்பாலான ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான தாற்காலிக உரிமைவிடல் அடிப்படையில் கலந்தாய்விலிருந்து வெளியேறியதாக, கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Wednesday, October 14, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு:மதிப்பெண் தளர்வுடன் தேர்ச்சி பெற்ற 211 பேர் முடிவுகள் வெளியீடு

.
புதுச்சேரி தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சி பெற்ற 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என கல்வித்துறை இயக்குநர் ல.குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 26.5.15ஆம் ஆண்டில் 425 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில்சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த 10.7.15-ல் ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்றவர்களை நிலுவையில் வைக்க உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.இதன் பின்னர் அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் பெற்ற 214 பேரின் முடிவுகள் கடந்த 25.9.15-ல் வெளியிடப்பட்டன.இதனிடையே கடந்த 9.10.15-ல் சென்னை உயர்நீதிமன்றம் தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீக்கியது.இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு பெற்று தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றிருந்த 211 பேரின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை இணையதளத்தில் காணலாம்.மேலும் 211 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19.10.15, 20.10.15 தேதிகளில் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் என்றார் குமார்.

Monday, October 12, 2015

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது?


முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 2015 ஆகஸ்ட் 12 முதல் 31 வரை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பொதுமாறுதல் கலந்தாய்வு நடந்தது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் நடக்கவில்லை.
வெகுதுார மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்திற்குள் பணி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு 2வது கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதில் இடம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், ஏற்படும் காலியிட அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவிக்கிறது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “10 ஆண்டு பணி நிறைவு முடித்த தகுதியான பட்டதாரி ஆசிரியருக்கு தேர்வு நிலை கிரேடு பதவிஉயர்வு வழங்கப்படும்.
இதற்கு பின் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்தால் 6 சதவீத சம்பள உயர்வு கிடைக்கும். தேர்வுநிலை கிரேடு இன்றி சிலர் பதவி உயர்வை தவிர்த்துள்ளனர். இதனால் 2ம் கட்ட முதுநிலை பதவி உயர்வு பட்டியல் வெளியாகி உள்ளது.
தேர்வு நிலை கிரேடு ஆசிரியர்கள் பதவி உயர்வை ஏற்கும் போது, முதுநிலை காலியிடங்கள் ஓரளவிற்கு நிரம்பும். இதன் பின் நடக்கும் கலந்தாய்வில் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டத்தில் அதிக வாய்ப்பை பெற கலந்தாய்வு தள்ளி போகலாம்,” என்றார்.