Friday, March 27, 2015

புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்':கல்வித்துறை மீது சந்தேகம்
புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் அவசரஅவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது. இதில் தேர்வான, 1,789 பேருக்கு பணி நியமனம் வழங்குவதற்கான, 'ஆன் - லைன் கவுன்சிலிங்' நாளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது. காவிரியின் குறுக்கே, கர்நாடகா அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கவுன்சிலிங்குக்கு உரிய நேரத்தில் வர முடியுமா என்று தேர்வானவர்கள் பலர் குழப்பம் அடைந்து உள்ளனர். இதற்கிடையில், கவுன்சிலிங் அறிவிப்பு குறித்து, பள்ளி ஆசிரியர்கள் பலர் கல்வித்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்வுகாலத்தை காரணம் காட்டி, கடந்த, நான்கு மாதங்களாக ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், பல ஆசிரியர்கள் தாங்கள் விருப்பப்பட்ட மாவட்டத்துக்கு பணி மாறுதல் பெறுவதை, மே மாத கவுன்சிலிங்கில்பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு முன் புதிய ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, ஆசிரியர்கள் இடம் மாற திட்டமிட்டுள்ள இடத்தை நிரப்ப, கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இதற்கு, தமிழக மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
முதுகலை ஆசிரியர் பணி: நாளை கலந்தாய்வு
முதுகலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு நாளை (28ம் தேதி) கடலூரில்நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உ<ள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வரியம் போட்டித்தேர்வுகளை நடத்தியது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்திய போட்டித் தேர்வுகளில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரும் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு கடலூரில் உள்ளமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய தளம் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்விற்கு வரும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் "ஹால் டிக்கெட்', ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய சான்று, கல்வி சான்றிதழ்கள், ஜாதிச்சான்று மற்றும் வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றம் நகல் கொண்டு வர வேண்டும். இந்த கலந்தாய்விற்கு நாளை (28ம் தேதி) காலை 9:00 மணிக்கு முன்னதாக வருகை தர வேண்டும்.

Wednesday, March 18, 2015

2011ல் நியமித்த தமிழாசிரியர்கள் முறைப்படுத்தி உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு முறையான நியமன உத்தரவை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2010-11ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள், அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாகநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி மேற்கண்ட தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கென தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேற்கண்ட ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான உத்தரவு வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்து அதற்கான சான்றை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை : டிஆர்பி அறிவிப்பு
ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களில்ஆசிரியர்களை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வில் எழுத்து தேர்வில் 95 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
5 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்த போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் வெளியிட்டது.ஆனால் இந்த பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் எங்கும் கிடைப்பதில்லை என்று சிறப்பாசிரியர் போட்டித் தேர்வு எழுத உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இந்த போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் 15169 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது. அவர்களில் பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் 5253 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடத்துக்கு போட்டித் தேர்வு ஜூன் மாதம் நடக்கும் என்றுஆசிரியர் தேர்வு ஆணையம்(டிஆர்பி) அறிவித்துள்ளது. ஓவியர்களுக்கான பாடத்திட்டம் குளறுபடியாக உள்ளது என்று முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். எனவே போட்டித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். அதனால் போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ஓவியம், தையல், இசை, பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு முறையை ரத்து செய்து விட்டு மாநில பதிவு முன்னுரிமையை நடைமுறைப்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராஜ்குமார் கேட்டுள்ளார். இந்த கோரிக்கை மீது ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசாணை எண் 185ல் கூறப்பட்டுள்ளபடியே ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Thursday, March 5, 2015

சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்'டா: இறுதி வாய்ப்பை வழங்கியது டி.ஆர்.பி.,
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்காக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 20 சதவீதம் பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 600க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில், பணிநாடுநர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்., 27ம் தேதி துவங்கியது. சேலம், சாரதா பாலமந்திர் மெட்ரிக் பள்ளியில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நேற்று மாலையுடன் முடிந்தது. இதில், 20 சதவீதம் பேர், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை. 'ஆப்சென்ட்' ஆனவர்களில் பலரும், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவதால் கலந்து கொள்ளவில்லை என, தெரியவந்துள்ளது. இருப்பினும், விடுபட்டவர்களுக்காக, மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க, டி.ஆர்.பி., முன்வந்து உள்ளது. அதன்படி, கடந்த நான்கு நாட்களாக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல் விடுபட்டவர்கள், நாளை, 4ம் தேதி நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், குறிப்பிட்ட மையங்களில், நாளை, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்ப்பு
மதுரை: டி.ஆர்.பி., சார்பில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது.இதற்காக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி,
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தகுதியுள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மதுரை ஓ.சி.பி.எம்., மேல்நிலை பள்ளியில் ஏற்கனவே நடந்தது. இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மார்ச் 3 மற்றும் 4ல் மீண்டும் நடக்கிறது. இது இறுதி வாய்ப்பாகும் என மதுரை முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'652 கணினி ஆசிரியர் நியமன பணிகளை உடனே நிறுத்த வேண்டும்' - 'மாஜி' கணினி ஆசிரியர்கள் போர்க்கொடி
'அரசுப் பள்ளிகளில், 652 கணினி ஆசிரியர் நியமன பணிகளை உடனே நிறுத்த வேண்டும்' என, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில், 1999 - 2000ல், கணினி பிரிவில் பட்டம் பெற்ற, 1,880 கணினி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். பின், இப்பணியில் சேர, கணினி பட்டத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 'ஏற்கனவே, 14 ஆண்டுகளாகப் பணியாற்றிய ஆசிரியர், 50 சதவீத மதிப்பெண் பெற்றால் நிரந்தரம் செய்யப்படுவர்' என,
அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்தேர்வில், 20 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டதாக, தொகுப்பூதிய ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கினர். பின், தேர்ச்சி மதிப்பெண், 35 ஆகக் குறைக்கப்பட்டது.ஆனாலும், ஏற்கனவே பணியாற்றிய, 652 பேரும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 652 பணியிடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான, சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, கடந்த, 27ம் தேதி துவங்கி நேற்று முடிந்தது.
எனவே, பணி நீக்கப்பட்ட ஆசிரியர்கள் டி.ஆர்.பி.,க்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் வசந்தராஜ் கூறியதாவது:பள்ளிகளில், கணினிப் பிரிவு துவங்கியது முதல், 14 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்தோம். அப்போது, பி.எட்., முடித்தவர்கள் இப்பணிக்கு வரவும் இல்லை; கணினி பற்றி படிக்கவும் இல்லை. ஆனால், அனைவரும் கணினி படித்து விட்ட நிலையில், இத்தனை காலம், குறைந்த ஊதியத்தில் உழைத்த எங்களை பணி நீக்கம் செய்வது அநீதி. எங்களுக்காகவே உருவாக்கப்பட்ட, 652 பணியிடங்களை பதிவு மூப்பில் நிரப்புவது பாரபட்சமான நடவடிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.