Thursday, September 4, 2014

3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்– அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“நாட்டின் எதிர்காலம், பள்ளி வகுப்பறைகளிலேயே தீட்டப்படுகின்றது” என்று ஆசிரியப் பணியின் உயர்வினை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் புகழ்ந்துரைத்துள்ளார். ஆசிரியப் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல– நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனை களையும் மாணவச் சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் மகத்தான பணியினை ஆற்றி வரும் ஆசிரியர்களைப் பாராட்டி தமிழக அரசு ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 53,288 ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளது.

மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு திட்டங்களை எனது தலைமை யிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி கூறுவதற் கேற்ப, மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கென இடை விடாது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் கல்விப் பணி மேன்மேலும் சிறந்தோங்கிட வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment